74 வயது முதியவர் உயிருடன் ஃப்ரீசர் பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிகழ்வானது சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட முதியவரை அவரது தம்பி ஃப்ரீசர் பெட்டிக்குள் வைத்து, மரணமடைய காத்திருந்துள்ளார். சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணிய குமார் (வயது 74). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதையடுத்து, அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். அவரது தம்பி சரவணன், இறந்தவர்கள் உடலை வைக்கப் பயன்படுத்தும் ஃப்ரீசர் பெட்டியை வரவழைத்துள்ளார்.
மறுநாள் ஃப்ரீசர் பெட்டியை வாங்க வந்த நிறுவன ஊழியர், பெட்டிக்குள் முதியவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை கண்டு, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல கட்டணமின்றி வாகனம் வழங்கும் தெய்வலிங்கம் என்ற வழக்குரைஞரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வந்து விசாரித்தபோது, முதியவரின் தம்பி சரவணன், "ஆன்மா இன்னும் போகவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்," என்று கூறியுள்ளதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாலசுப்ரமணிய குமார் மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.