இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு மாணவியின் தும்மல் தான் இப்போது சமூக இணைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில நாட்களிலேயே இந்த மாணவியின் தும்மலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது.
சமூக இணையதளங்களில் வைரலாவதற்கு சிலர் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர். பேஸ்புக்கில் தனக்கு கூடுதல் லைக் கிடைக்கவில்லை என்று கூறி சிலர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் நடந்துள்ளன. எந்த நேரத்தில், யார், எப்படி, எந்த ரூபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாவார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதேபோலத் தான் இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு மாணவியும் தற்போது வைரலாகி உள்ளார். ஆனால் அதற்காக அவர் எந்த சிரமமும் படவில்லை என்பது தான் இதில் வேடிக்கையான ஒன்றாகும். தற்செயலாக இவர் கேமரா முன் தும்மிய காட்சி தான் தற்போது சமூக இணையதளங்களில் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவில் உள்ள கிழக்குப் பகுதியான ஜாவா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜிடானா. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியில் வைத்து ஒரு நிகழ்ச்சிக்காக வீடியோ படமொன்றை எடுக்க இவர் தீர்மானித்தார்.
இதற்காக தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கேமராவுடன் படமெடுக்க தயாரானார். கேமராவை ஆன் செய்துவிட்டு இவர் பேசுவதற்கு தயாரான போது திடீரென ஜிடானாவுக்கு தும்மல் வந்தது. அப்போது கேமரா ஆனில் இருப்பதை அவர் மறந்து விட்டார். அவர் ரசித்து தும்மினார். இந்த காட்சி கேமராவில் பதிவான விவரம் முதலில் ஜிடானாவுக்கு தெரியாது. அன்றைய படப்பிடிப்பு முடிந்த பின்னர் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது தான் தும்மிய காட்சியும் பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதை உடனடியாக டெலிட் செய்து விடுமாறு தனது தோழியிடம் கூறினார். ஆனால் டெலிட் செய்யும் அவசரத்தில் தவறுதலாக அந்த காட்சி சமூக இணையதளங்களில் பதிவேற்றப்பட்டது. நிமிட நேரத்தில் இது சமூக இணையதளங்களில் வைரல் ஆனது. ஒரு சில நாட்களிலேயே இந்த வீடியோவை 1 கோடி பேருக்கு மேல் பார்த்து விட்டனர். தன்னுடைய தும்மல் கட்சியை 1 கோடிக்கு மேல் பார்த்து விட்டதை ஜிடானாவால் இப்போதும் நம்ப முடியவில்லை.