கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் மறைந்ததால் காலியாக இருக்கும் இடத்துக்கு தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த எச்.வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவுற்று அவர் மறைந்தார். எச்.வசந்தகுமாரின் மறைவையடுத்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, கன்னியாகுமரிக்கு வரும் 2021 பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்த வேலைகள் நடந்து வரும் நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் 16ம் தேதி வெளியிடப்படும் என்றும் டிசம்பர் 15ம் தேதிக்குள் வாக்காளர்கள் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி தமிழ்நாட்டிலும் 2021 ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், மாநிலத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 8 சதவீதமாக இருப்பதால் அவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.