பழம்பெரும் இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்திக்கு அவர் இறந்து 7 வருடங்களுக்கு பின்னர் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது.
பழம்பெரும் சினிமா இசையமைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் வி. தட்சிணாமூர்த்தி. இவர் மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 125க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானின் தந்தையான ஆர். கே. சேகர் உள்பட பல ஜாம்பவான்கள் இவரிடம் உதவியாளர்களாக இருந்துள்ளனர். தமிழில் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள் ஆகிய படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு தன்னுடைய 94ம் வயதில் தட்சிணாமூர்த்தி மரணமடைந்தார். அவர் மரணமடைவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன் சியாம ராகம் என்ற படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தப் படம் வெளியானது. நேற்று கேரள அரசின் கடந்த ஆண்டுக்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மறைந்த தட்சிணாமூர்த்தி இசையமைத்த சியாம ராகம் படத்திற்கான பாடல்களுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.
இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி மரணமடைந்து 7 வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் பல சிறப்பான சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ள போதிலும் அதிகமாக இவருக்கு கேரள அரசின் விருதுகள் கிடைக்கவில்லை. கடந்த 49 வருடங்களுக்கு முன்பு 1971ல் தான் தட்சிணாமூர்த்திக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த வருடம் தான் அதுவும் அவர் மரணமடைந்த பின்னர் விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.