மாற்றுத்திறனாளிகளை அவமரியாதை செய்ததாக மதுரை, திண்டுக்கல் உள்படப் பல மாவட்டங்களில் நடிகை குஷ்பு மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு கடந்த வாரம் திடீரென டெல்லிக்குச் சென்று பாஜகவில் சேர்ந்தார். பின்பு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு, சென்னை திரும்பினார். அப்போது, அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் நான் 6 ஆண்டுகளாகச் சிறப்பாக பணியாற்றினாலும், எனக்கு சில தலைவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். எனக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்றார். மேலும், காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என்றும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.
இதையடுத்து, மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளிகளை அவர் அவமரியாதை செய்து விட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, குஷ்பு மீது வழக்கு தொடரப் போவதாகத் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்திருந்தது.அதன்படி, அந்த சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமையில் சிலர் இன்று மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் குஷ்பு மீது புகார் கொடுத்தனர். மாற்றுத்திறனாளிகளைச் சிறுமைப்படுத்துவது ஊனமுற்றோர் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவு 92ஏ-ன் கீழ் குற்றமாகும். எனவே, குஷ்பு மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதே போல், திண்டுக்கல் மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் செல்வ நாயகம் தலைமையில் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அந்த சங்கத்தினர் வரிசையாகப் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.இதற்கிடையே, நடிகை குஷ்பு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.