பார்வையற்ற மதுரை பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் மறுப்பு!

IAS denial to blind Madurai woman

by Loganathan, Oct 21, 2020, 21:16 PM IST

சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற
மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் பணி ஒதுக்கீட்டுப் பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர் எம்.பூரணசுந்தரி (25). இவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி,2019-ல் 4-வது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். இவருக்கு ஐஆர்எஸ் (இந்திய வருவாய்ப் பணி- வருமான வரி) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தனக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் பூரணசுந்தரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ''ஓபிசி இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டப்படி எனக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு ஐஆர்எஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் என்னை விடக் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஐஏஎஸ் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது'' எனப் பூரணசுந்தரி கூறியிருந்தார்.

இந்தமனுவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயக் கிளையின் தலைவர் எஸ்.என்.டீர்ட்டல், நிர்வாக உறுப்பினர் சி.வி.சங்கர் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிட்டனர். பின்னர், 2019-ம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து 25.09.2020-ல் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியல் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22- ம் தேதிக்குத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை