தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 42 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு பிறகு டிஜிபி அலுவலகத்தில் இரண்டு ஆயுதப்படை காவலர்கள் தற்கொலைக்கு முயன்றனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. தற்போது, காவல் துறையினர் தற்கொலை செய்வது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு காவல்துறையில் பணியாற்றும் 42 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் 1039 பேர் காவல்துறை பணியில் இருந்து ராஜினாமா செய்ததாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.