இனி எந்தக் கட்சியின் கொடியையும் ஏந்த மாட்டேன். எந்த தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் நடைபெற்ற இலக்கிய கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், “எடப்பாடி அரசை கவிழ்க்க கடப்பாரை எதுவும் தேவையில்லை. நீதிமன்றத் தீர்ப்பே போதுமானது. அத்தீர்ப்பு நியாயத்தின் அடிப்படையில் வந்தால், ஆட்சியிலிருப்பவர்கள் வீட்டிற்கு செல்வார்கள்.
மதிமுகவில் மீண்டும் இணைவீர்களா? என்று கேட்கிறீர்கள். இனி எந்தக் கட்சியின் கொடியையும் ஏந்த மாட்டேன். எந்த தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன். காவிரி மேலாண்மை வாரியம் என்பதில் உள்ள ஆண்மையை எடுத்துவிட்டு, பார்வையை போட்டுள்ளார்கள்.
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இப்பிரச்சனையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.