கொடியில் இருக்கும் கறுப்பு, வெள்ளை நிறத்திற்கு என்ன அர்த்தம் என்பது கூட இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு தெரியாது என்று டி.டி.வி. தினகரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன் உள்ள அதிமுக கொடியை பயன்படுத்த டி.டி.வி. தினகரனுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு செவ்வாயன்று (மார்ச் 27) நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி. தினகரன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கறுப்பு, வெள்ளை நிறத்துடன் பல அமைப்புகள் கொடிகளை பயன்படுத்தி வருகின்றன. அதை மறைத்து அதிமுக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு பிறகு தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் அமமுக தொடங்கப்பட்டுள்ளது. இது தற்காலிக முடிவுதான். கறுப்பு என்பது ஒடுக்கப்பட்ட திராவிட மக்களின் துன்பங்களையும், அவற்றை ஒழிக்கும் நிறமாக சிகப்பும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் கறுப்பு, சிகப்பு நிறங்கள் எதை குறிக்கின்றது என்பதும், அதன் முக்கியத்துவம் என்ன என்பதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தெரியாது. கறுப்பு, சிகப்புடன் மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட பல்வேறு கட்சி கொடிகளின் படங்களையும் பதில் மனுவில் இணைத்துள்ளோம். அதில் முதலில் தொடங்கப்பட்ட திராவிட கழகம் முதல் சமீபத்தில் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கொடிவரை அனைத்திலும் கருப்பு, சிகப்பு நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பதில் மனுவிற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.