ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் எதிரும், புதிருமாகக் கருத்து கூறியுள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால், சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அனைத்துத் தமிழ் கொலைக் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்படும்.
7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலைக்குற்றம் செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, அவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜீவானந்தம், ராமானுஜம் போன்றவர்களைத் தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது.கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேச வேண்டாம் என்பது பொருளாகும்.
எனவே, முன்னாள் பிரதமரைப் படுகொலை செய்து, இந்தியாவிற்குக் கேடு விளைவித்த குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது என்று கூறியுள்ளார்.
இதை ஏற்க முடியாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மறுத்துக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், பேரறிவாளன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் திமுக நிலைப்பாடு. காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளதால், அவர்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கூட்டணி வேறு, கொள்கை வேறு. அதை மாற்ற முடியாது என்றார்.
எழுவர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இதற்கு முன்பு பெரிய எதிர்ப்பு காட்டியதில்லை. தற்போது கே.எஸ்.அழகிரி காட்டமாக அறிக்கை கொடுத்துள்ளதால், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை இருக்கிறதோ என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கிறார்கள்.இதற்கிடையே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்குக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.