தேசிய நீர் விருது: சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு

இந்த ஆண்டுக்கான(2019 -2020) தேசிய நீர் விருதினை தமிழக அரசுக்கு அறிவித்துள்ளது ஜல்சக்தி அமைச்சகம்.

by Balaji, Nov 7, 2020, 16:14 PM IST

மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி மத்திய நீர்வள அமைச்சகம் (ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், சிறந்த மாநிலமாகத் தமிழகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

ஆறுகளை மீட்டெடுத்தல் பிரிவில் இந்திய அளவில் இரண்டு மாவட்டங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இரண்டு மாவட்டங்களுமே தமிழகத்தில் தான் உள்ளன. முதலிடம் வேலூர். இரண்டாமிடம் கரூர் மாவட்டம்.அதே போல், நீர் சேமிப்பு பிரிவில் பெரம்பலூர் 2வது இடத்திற்கும், நீர் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாண்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மதுரையும் தேர்வாகி உள்ளது.

தேசிய நீர் விருதுகள் 2019 இன் கீழ் சிறந்த மாநிலம் பிரிவின் கீழ் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்தது.தமிழ்நாட்டைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகியவை சிறந்த மாநிலங்களாக உள்ளன.கிராம பஞ்சாயத்துக்கான நீர் பாதுகாப்பு பிரிவின் கீழ், தூத்துக்குடி முதல் இடத்தைப் பிடித்தது. சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் முதல் இடத்தை மதுரை மாநகராட்சி பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நெல்லை சக்தி நாதன் கணபதி பாண்டியன், கோவை கால்வாய் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.மணிகண்டன், , ஆகியோர் தென் மண்டலத்திற்கான சிறந்த நீர் வாரியர் பிரிவின் கீழ் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.புதுச்சேரி, கட்டேரிகுப்பம், இந்திரா காந்தி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளி பிரிவில் முதல் இடம் கிடைத்துள்ளது.தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 11,12 தேதிகளில் நடைபெறுகிறது.

You'r reading தேசிய நீர் விருது: சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை