சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்பிரவு பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி சமாதானப்படுத்தி ராஜினாமாவை வாபஸ் பெற வைத்தனர்.. கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவராகத் தலித் சமுதாயத்தவரான ராஜேஸ்வரி பாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் ராஜேஸ்வரி தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எந்த பணிகளும் செய்ய விடாமலும் நிர்வாகத்தைச் செயல்பட விடாமல் துணைத் தலைவர் நாகராஜ் தடுப்பதாகவும், மற்ற உறுப்பினர்களும் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. பதவியேற்று 11 மாதங்கள் ஆகியும் காசோலை புத்தகம் கூட வழங்கப்படவில்லை என்றும் கூட்டத்திற்கே அழைப்பதில்லை, மீறிச் சென்றால் அனைவரும் வெளியே சென்று விடுகின்றனர்.
ஜாதி ரீதியாகத் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கூறி பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.இதனையடுத்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் அழகுமீனாள், சுந்தர மகாலிங்கம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை(திமுக) உள்ளிட்டோர் கால்பிரவு ஊராட்சி அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி காசோலை புத்தகம் வழங்க வேண்டும், துணைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளர் அழகுமீனாளிடம் புகார் கொடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபின் ராஜேஸ்வரி தனது ராஜினாமா முடிவைக் கைவிட்டார். ஒன்றிய ஆணையாளர் அழகுமீனாள் ஊராட்சி மன்ற தலைவர் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்..