தமிழகத்தில் இருந்து கொண்டு எச்.ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடப்போவதில்லை. தமிழக நலனுக்காக அனைவரும் ஒருமித்த கருத்துடன் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து கொண்டு எச்.ராஜா தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பேசியிருந்த எச்.ராஜா, “காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல், உச்சநீதிமன்ற தீர்ப்பில் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட ஸ்கீம் என்ற நதிநீர் பங்கீட்டு செயல் திட்டத்தை, மத்திய அரசு உறுதியாக செயல்படுத்தும். கர்நாடகத்தில் தேர்தல் நடப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளிப்போடுவதாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்து இருந்தார்.