Sunday, Apr 11, 2021

தமிழகத்தில் நடந்த இன்னொரு அமெரிக்க கொண்டாட்டம்

by Balaji Nov 12, 2020, 12:10 PM IST

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அந்நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றித் தான் கொண்டாட்டங்கள் குறித்துத்தான் நம் நாட்டில் பிரதானமாகத் தெரிந்தன. ஆனால் ஈரோடு அருகே உள்ள பெருமாள் பாளையம் என்ற ஊரில் நடந்த அதற்கு நிகரான கொண்டாட்டம் அவ்வளவாகத் தெரியாமல் போய்விட்டது.அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன், கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழு ஒன்றை அமைத்துள்ளார். இக்குழுவில் டாக்டர் செலின் கவுண்டர் இடம் பிடித்திருக்கிறார்.43 வயதாகும் செலின், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்கக் காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் என்ற கிராமம்.

டாக்டர் செலினின் தந்தை ராஜ் நடராஜன் கவுண்டர், பெருமபாளையத்தைச் சேர்ந்தவர். 1960 ல் அமெரிக்காவிற்குச் சென்று போயிங் விமான நிறுவனத்தில் பணிபுரிந்தார்.தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.டாக்டர் செலின் குறித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உள்ள கிராமத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அங்கு வசித்துவரும் டாக்டர் செலினின் பெரியப்பா மகள் அன்னபூரணி, கிராமத்து மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். டாக்டர் செலின் இதுவரை 4 முறை மொடக்குறிச்சிக்கு வந்திருக்கிறாராம்.

செலின் 2018 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பெயரில் ஒரு அறக்கட்டளை அமைக்க இங்கு வந்து சென்றிருக்கிறார். இந்த அறக்கட்டளை மூலம் கிராமத்துக் குழந்தைகளின் கல்வி செலவையும் தன் தந்தை படித்த மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டிற்காகவும் பல பணிகளை ஏற்று நடத்துகிறார். பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு அவர் நிதியுதவி செய்தார். ஒவ்வொரு ஆண்டும் அவர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடர உதவித் தொகை வழங்குகிறார்.

அவரது அடுத்த வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர் இக் கிராம மக்கள், என்றார்.கொரானா ஊரடங்கின் போது பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் சத்தான உணவை இழப்பார்கள் என்பதை உணர்ந்த செலின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவைக் கிடைக்க மளிகை பொருட்களை வீடு வீடாக வழங்கியிருக்கிறார் இந்தியாவில் கொரானா அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அவர் அது பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்திப் பாதுகாப்பாக இருப்பது மற்றும் நோய் பரவாமல் தடுப்பது குறித்து கிராமவாசிகளுக்கு வழிகாட்டுதல்களை அனுப்பினார் என்று சொல்லி ஆச்சரியப்படுகிறார்கள் கிராம மக்கள்.

தனது ஊர் மக்களின் இந்த கொண்டாட்டங்களை செலின் ட்விட்டரில் , பகிர்ந்துள்ளார்.தனது ஜாதி பெயரைத் தனது பெயருடன் இணைத்துக் கொண்டிருப்பது ஏன் என்று சிலர் இவரிடம் கேட்கஎனது தந்தை 1960 களில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பொது நடராஜன் என்று அவரது பெயரை உச்சரிக்க அமெரிக்கர்களுக்குக் கடினமாக இருந்தது. கவுண்டர் அவர்களுக்கு உச்சரிக்க எளிதாக இருந்தது . நான் பிறப்பதற்கு முன்பு 1970 ஆம் ஆண்டு எனது தந்தை தனது பெயரைக் கவுண்டர் என்று மாற்றினார். என் தந்தை பெயர்தானே என் பெயர். சிலருக்கு அது பிடிக்கவில்லை ஆயினும் அது எனது வரலாறு மற்றும் அடையாளத்தின் ஒரு பகுதி. நான் திருமணம் செய்து கொண்டபோது எனது பெயரை மாற்றவில்லை. நான் இப்போதும் அதை மாற்றவில்லை, என்று சொல்லியிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டில், பீப்பிள் பத்திரிகை உலகத்தை மாற்றும் 25 பெண்கள் என்ற தலைப்பில் ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் இடம் பெற்றவர்களில் டாக்டர் செலினும் ஒருவர்.

You'r reading தமிழகத்தில் நடந்த இன்னொரு அமெரிக்க கொண்டாட்டம் Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Tamilnadu News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை