சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் 19 ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவல்துறையினர் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் சங்கர், கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும் டெல்லி தடயவியல் ஆய்வு மையத்தின் அறிக்கையும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இது தவிர ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தியதாக குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 10க் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றப்பத்திரிகை நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.