திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 29ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2600 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். திருவிழா குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகளுடனான மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கொரரோனா தொற்று காரணமாக இந்தாண்டு பரணி தீபம் மற்றும் மகாதீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 29-ஆம் தேதி நடைபெறும் கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்பட மாட்டாது. வழக்கமான பேருந்துகள் மட்டுமே இயங்கும். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் வசிக்கும் அடையாள அட்டை உள்ள நபர்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் பக்தர்களும் நேரடியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் 3 ஆயிரம் என ஒரு நாளைக்கு 8 ஆயிரம் பக்தர்கள் கோவிலில் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏற முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.