மக்களின் குரல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கேட்கவில்லை, மத்திய ஆட்சியாளர்களுக்கு கேட்க வேண்டும் என தூத்துக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. தற்போது செயல்பட்டு வரும் ஆலையை மூட வேண்டும் என கோரி ஆலையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ச்சியாக 49ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இக்கிராம மக்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கத்தினர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வ.உ.சி. கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வகுப்பு புறக்கணிப்பு செய்து வருவதோடு மக்களுடன் போராட்டக் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து குமரெட்டியாபுரத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மாவட்ட தொழில் மையம் முன்பு ரசிகர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், “நமது குரல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு கேட்கவில்லை. எனவே தில்லியிலுள்ள ஆட்சியாளர்களுக்கு நமது குரல் எதிரொலிக்க வேண்டும். குற்றம் கடிதல் அரசின் வேலை. அவர்கள் செய்யாவிட்டால் இனி மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் என்று பேசினார்.
பின்னார் குமரெட்டியாபுரத்தில்ல் போராடும் மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “நான் ஓட்டிற்காகவோ மீடியாக்களின் விளம்பரத்திற்காகவோ இங்கு வரவில்லை. விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. கட்சியின் சாயல் இல்லாமல் ஒரு தமிழன் என்ற முறையில் வந்துள்ளேன். மக்களின் இந்த வேப்பமரத்தடி நிழல்தான் என் மய்யம். மக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை.
மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும். குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்றார். ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முழக்கமிட்டார்.