பாஜகவில் சேர்ந்தார் கே.பி.ராமலிங்கம்.. அமித்ஷாவுடன் சந்திப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 21, 2020, 13:13 PM IST

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் இன்றிரவு அமித்ஷாவை சந்திக்கிறார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த ராமலிங்கத்திற்கு திமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்பட்டது.

திமுகவில் விவசாய அணி மாநிலச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தென்னை விவசாயிகள் நல வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார். திமுகவில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்து வந்த கே.பி.ராமலிங்கம், அழகிரி நீக்கப்பட்ட பிறகு சிறிது நாட்கள் ஒதுங்கியிருந்தார். அதன்பின், ஸ்டாலின் தலைமையை ஏற்று, மாநில விவசாய அணிச் செயலாளர் பொறுப்பில் நீடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் திடீரென திமுகவுக்கு எதிராக பேசத் தொடங்கினார். கடந்த மார்ச்29ம் தேதி அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டியிருந்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வீடியோ கான்பரன்சில் சர்வக் கட்சித் தலைவர்களிடமும் முதல்வர் ஆலோசிக்க வேண்டுமென்ற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கையைத் தேவையற்றது என கே.பி.ராமலிங்கம் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கத்தை ஸ்டாலின் நீக்கினார். இதனால், கே.பி.ராமலிங்கம் அதிமுகவில் சேரப் போவதாகப் பேசப்பட்டது.

ஆனால், அங்கு அவருக்கு என்ன எதிர்ப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை. அவர் அதிமுகவில் சேரவில்லை. தற்போது அழகிரி மீண்டும் அரசியலுக்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருடன் கே.பி.ராமலிங்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், திடீர் திருப்பமாக இன்று காலையில் கே.பி.ராமலிங்கம் பாஜகவில் சேர்ந்தார். தமிழக பாஜகவுக்கு மேலிடப் பொறுப்பாளரான சி.டி.ரவி முன்னிலையில் அவர் கட்சியில் சேர்ந்தார். பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மகளிரணி தேசியச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You'r reading பாஜகவில் சேர்ந்தார் கே.பி.ராமலிங்கம்.. அமித்ஷாவுடன் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை