சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு திமுகவில் புதிய அணி.. கார்த்திகேய சேனாபதிக்கு பதவி..

by எஸ். எம். கணபதி, Nov 23, 2020, 14:35 PM IST

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மனித சமுதாயத்திற்கு, அடிப்படை ஆரோக்கியத்தின் இதயமாகச் சுற்றுச்சூழல் முக்கியப் பங்காற்றுகிறது. எனினும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுக் கொள்கை-2020 உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகளின் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் - விவசாயிகளின் வேளாண்மையைக் கெடுக்கும் செயல்பாடுகளில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மத்திய - மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கு எதிரான, ஒருதலைபட்சமான, எதிர்காலம் குறித்த எண்ணம் சிறிதுமில்லாத நடவடிக்கைகள், மனிதக் குலத்திற்கே சவால் விடுவதாகவும் - வேளாண் நிலங்களைப் பறிப்பதாகவும் - சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் தமது உயிருக்கு நிகராகப் போற்றி வைத்திருக்கும் நிலங்களைச் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ளும் போக்கினை அரசுகள் கையாள்வது அதிகரித்து வருகிறது. இந்தக் கொடிய செயல், அடுத்து அடுத்துவரும் தலைமுறைக்கே பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்ற சூழல் உருவாகியிருக்கிறது.

சுற்றுச்சூழல் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாமல் - கார்ப்பரேட் முதலாளிகளை மட்டும் மனதில் வைத்து, கொண்டு வரப்படும் திட்டங்களால் ஏற்கனவே தமிழ்நாடு பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், தூத்துக்குடி பகுதியில் ஸ்டர்லைட் ஆலை, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, தமிழ்நாடு முழுவதும் எண்ணெய்க் கிணறுகள் - போதாக்குறைக்கு இப்போது ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்று சுற்றுச்சூழல் - கடல்வளம் - நிலவளம் ஆகியவற்றிற்கு எதிரான ஆட்சியாளர்களின் அணுகுமுறையினைத் தட்டிக் கேட்டுத் திருத்துவதற்கும் - தேவைப்படும்போது போராடுவதற்கும் - திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு அணியை உருவாக்கிட வேண்டும் என்று நீண்டநாட்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.அதனடிப்படையில் “தி.மு.க. சுற்றுச்சூழல் அணி” உருவாக்கப்பட்டு, அதன் மாநிலச் செயலாளராகக் கார்த்திகேய சேனாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கலைஞரால் கழகத்தின் தளகர்த்தர், கொங்கு நாட்டின் தலைதாழாச் சிங்கம், தன்மான முரசு, தமிழ் இனத்துச் சுடரொளி என்றெல்லாம் பலபடப் பாராட்டப்பட்ட மறைந்த குட்டப்பாளையம் சாமிநாதன் பேரன். பல்லுயிர் மற்றும் பாரம்பரிய கால்நடைப் பாதுகாப்பிற்காகப் பாடுபட்டு வரும் இவர். “நீரின்றி அமையாது உலகு” என்று கல்லூரி மாணவர்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ரியோ உச்சி மாநாட்டில் நிலையான வளர்ச்சித் திட்டம் ஆகிய பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர். ஆகவேதான் மிகப் பொருத்தமான இவரது பொறுப்பில், கழகத்தின் சுற்றுச்சூழல் அணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - சுற்றுச்சூழலுக்காகப் பாடுபடும் சமூகநல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் - கழக மாவட்டச் செயலாளர்களும், தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ள “சுற்றுச்சூழல் அணிக்கு” மாபெரும் ஆதரவினை அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு திமுகவில் புதிய அணி.. கார்த்திகேய சேனாபதிக்கு பதவி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை