நிவர் புயல் இன்று நள்ளிரவு காரைக்காலில் கரையை கடக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

by எஸ். எம். கணபதி, Nov 25, 2020, 09:06 AM IST

நிவர் புயல் இன்று(நவ.25) நள்ளிரவு காரைக்கால் அருகே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வங்கக் கடலில் மத்திய பகுதியில் கடந்த 21ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.

பின்னர், இது புயலாக மாறியது. இதற்கு நிகர் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்றிரவு கடலூருக்குக் கிழக்கு தென்கிழக்கு திசையில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 380 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று(நவ.25) காலை கூறியதாவது:நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தென் கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்.புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ. முதல் 130கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும். சில பகுதிகளில் 140 கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம். நிவர் புயல் தற்போது மணிக்கு 6.கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

புயல் காரணமாக நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

More Tamilnadu News


அண்மைய செய்திகள்