பண்ருட்டி அருகே 40 மணி நேரத்திற்க்கும் மேலாக விவசாயி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் சேகர் ரெட்டி பினாமி என்ற அடிப்படையில் அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகிசந்திரன்(65) விவசாயியான இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.
பண்ருட்டி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சொத்துகள் வாங்கி உள்ளதாகவும் வருமான வரித் துறை யினருக்கு தகவல் சென்றது. இதைத்தொடர்ந்து சுகிசந்திரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் சோதனை நடத்தினர். சென்னையிலிருந்து வந்த 12 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சுகி சந்திரனின் மகன் முத்துகுமார் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பர். சேகர் ரெட்டியின் காண்ட்ராக்ட் பலவற்றையும் முத்துக்குமார் தான் செய்து வருகிறார். அந்த அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது என்று ஒரு தரப்பினரும்.
சுகி சந்திரனின் மருமகன் ராம்பிரபு மும்பையில் நடத்திவரும் ஐடி கம்பெனியில் 100 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு நடந்துள்ளது. அது தொடர்பாகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை 3 மணிக்குதான் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை முடித்துக்கொண்டு சென்றனர். 40 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.