காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், நாளை பேருந்துகள், பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால், தமிழகமே கொந்தளித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 5ம் தேதி (நாளை) திமுகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதற்கு, பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சிகளை தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்றும் அரசு பேருந்துகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறுகையில், “ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொறுப்பாளர்கள் முழு ஈடுப்பாடோடு பங்கேற்று தமிழர்களின் வாழ்வுரிமை போராட்ட வெற்றிக்கு துணை நின்றிட வேண்டுகிறோம் ” என்றார்.