என் பெற்றோர் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். அந்த பாசம் எல்லாம் மறந்து பாலூட்டிய கரங்களே அரிவாள் எடுத்து வெட்டும் என்பது எவ்வளவு அதிர்ச்சிக்குறியது என்று உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் மாநாடு சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய கவுசல்யா, “அனிதாவின் மரணமும், கேரள ஆதிராவின் படுகொலையும், விழுப்புரம் ஆராயிக்கு நேர்ந்த கொடூர வன்கொடுமையும் பெண்கள் மீதான அடிமைத்தனமும், ஒடுக்குமுறையும் பன்மடங்கு பெருகியிருப்பதையே காட்டுகின்றன. கேரளத்தின் ஆதிரா கொலை என்னை உலுக்கிய கொடூர நிகழ்வாகும். அவரது தந்தையே கொலை குற்றவாளி என்று கைது செய்துள்ளனர்.
ஆதிராவுக்கு திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்துள்ளார்கள். ஒருவேளை பெற்றோர் மறுத்திருந்தால் வேறுவழியின்றி அவள் வீட்டை விட்டுவெளியேறி இருக்கலாம். அப்போதும் இந்த கொலை நடைபெறாமல் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.
பெற்ற மகளையே கொலை செய்ய வைக்கிறது. அந்த சாதி வெறிதான் வளர்த்த மகளையே கொலை செய்ய காரணமாகிறது. தன் சாதி பெருமிதம் காக்கப்பட வேண்டும். தன் சாதிக்குள் தான் இழந்த கௌரவம் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கொலைகள். பெற்ற மகளை கொலை செய்வதை அவர்கள் வீரமாகவும், கம்பீரமாகவும் பார்க்கிறார்கள்.
அதில் ஒருவித பெருமித உணர்வு அடைகிறார்கள் என்பதை நாம்கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். என்னைப் பொறுத்த வரை என் பெற்றோர் என்னை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். அந்த பாசம் எல்லாம் மறந்து பாலூட்டிய கரங்களே அரிவாள் எடுத்து வெட்டும் என்பது எவ்வளவு அதிர்ச்சிக்குறியது. என் பெற்றோரின் அந்த பாசம் பொய்யானது இல்லை. ஆனால் சாதி பாசம் அதைவிட வலிமையானது.
முதலில் நான் என் மீதான கொலைத் தாக்குதலுக்கு எதிராக போராடப் புறப்படவில்லை. ஏனென்றால் எனக்கு அப்போது ஆணவக் கொலை என்ற சொல்லே தெரியாது. அதற்கெதிராக போராட வேண்டும் என்ற சிந்தனை கூட இல்லை. சங்கரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், என் கண்முன்னே துடிதுடிக்க கொலை செய்யப்பட்டதும் என்னை உலுக்கி எடுத்து விட்டது.
என் பெற்றோரிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள் நிறைய உண்டு. அவன் செய்த குற்றம் என்ன? படிக்கும் போது காதல் வருவதும், வந்த காதலுக்கு உண்மையாக இருப்பதும் இந்த சமூகத்தில் நீங்கள் கேள்விப்படாத ஒன்றா. இப்படி இயல்பான ஒன்றுக்காக ஒருமனித உயிர் மண்ணோடு மண்ணாக புதைந்து போகச் செய்வது நியாயமா?
அவனை கொலை செய்வது என்பது சங்கரின் உயிரை மட்டுமில்லை. அவனது எதிர்காலத்தை, கனவை, அவன் வளர்ச்சியை, கன்னியத்தை, அவனது உயந்த பண்பை, உண்மையை, நேர்மையைஎன எல்லாவற்றையும் கொலை செய்துவிட்டார்கள். சங்கரின் பெயராலேயே சொல்கிறேன். என் பெற்றோரின் பாசத்தை நான் மறக்கவே இல்லை.
எப்படி சாதியம் நீங்கள் என்மீது வைத்த பாசத்தை மறைத்ததோ. அதேபோல் இந்த சாதி ஒழிப்பு என்னும் உணர்வு உங்கள் மீதான பாசத்தை எனக்கு மறைத்துவிட்டது. இன்று சாதி ஒழிப்புக்கெதிராக பயணப்படுகிறேன். உங்களை பழி தீர்க்க வேண்டும், உங்களை எதிரியாக பார்க்க வேண்டும் என்ற மனநிலை கூட எனக்கு இல்லை. எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன். எந்த குற்றத்திற்காகவும் ஒருவர் தூக்கு தண்டனை பெறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
எனக்குத் தேவை சாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம்தான். ஆதிராவின் தந்தைக்கும், இனி நடைபெறும் இதுபோன்ற படுகொலைகளுக்கும் தனிச் சட்டம் தேவை. இந்த சட்டம் கோருவதில் சாதி ஒழிப்பு என்னும் அடிப்படை உள்ளது. மற்றபடி யாரையும் பழிவாங்க அல்ல. உண்மையில் ஒட்டுமொத்த மனித குலத்தையும் நான் நேசிப்பதனால் இந்த சாதி ஒழிப்பையே என் லட்சியமாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.