கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. பின்னர் பொது ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகளும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இந்த மாதம் நவம்பர் இறுதி நாளான இன்றோடு ( 30-11-2020) பொது தளர்வுகள் முடிவடைவதால், அரசு சார்பில் அடுத்த பொது முடக்கம் மற்றும் தளர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மாண்புமிகு. திரு.எடப்பாடி K பழனிச்சாமி பேசுகையில், தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால், நோய்த் தொற்று விகிதம் 6.55 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,600 நபர்களுக்குக் கீழ் குறைந்துள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்குக் குறைந்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஊரடங்கானது பல கட்டுப்பாட்டுத் தளர்வுகளுடன் அடுத்த மாதம் 31-12-2020 வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
1) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கலை, அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளில் உள்ள இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 07-12-2020 முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2) மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து கல்லூரிகளும் ( இளநிலை மற்றும் முதுநிலை) 07-12-2020 முதல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 01-02-2021 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3) நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சிக்காக மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4)நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மெரினா கடற்கரைகள் வரும் 14-12-2020 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும்.
5)வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்ச 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 01-12-2020 முதல் 31-12-2020 வரை அனுமதிக்கப்படுகிறது.
6) வெளி மாநிலங்களிலிருந்து (புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் தவிர) தமிழ்நாட்டுக்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள இ-பதிவு முறை தொடர்ந்து அமல்படுத்தப்படும்.