திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த மாதம் 29-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது.அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தைத் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து சென்றனர். அதில் பலர் மூலஸ்தான மண்டபத்தில் நின்று பரணி தீபத்தை செல்போனில் புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர்.
சிலர் அண்ணாமலையார் கோவிலின் மூலஸ்தானத்தில் நடந்த பூஜையை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் மூலஸ்தான காட்சியைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளது.