புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயலாக மாறிய இதற்கு புரெவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலையில் மன்னார் வளைகுடா கிழக்கே 40 கி.மீ. தொலைவில் இலங்கைப் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. பாம்பனில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 120 கி.மீ.தொலைவிலும், கன்னியாகுமரிக்குக் கிழக்கு மற்றும் வடகிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும். இன்று பிற்பகலில் பாம்பனை நெருங்கி வரவிருக்கிறது. அதன்பின்னர், தென்தமிழக கடலோர பகுதிகளைக் கடந்து இன்றிரவு அல்லது 4ம் தேதி அதிகாலையில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, புயல் தாக்கக் கூடிய தென்மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு தலா 2 குழுவினரும், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு தலா 3 குழுவினரும், மதுரை, கடலூர் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவினரும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.புயல் தாக்கும் அபாயம் உள்ள மாவட்டங்களில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் நேற்று(டிச.2) ராமேஸ்வரத்திற்குச் சென்றார். அங்கு மீட்புப் படையினருடன் விவாதித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் ஆகியோரும் சென்றனர். இன்று மாலையில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால், தென்மாவட்டங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.