தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அதில், "தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த அக். 31-ல் உயிரிழந்தார். கும்பகோணம் நகரில் துரைக்கண்ணுவின் ஆதரவாளர்கள் பலரின் வீடுகளில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார்கள் சோதனை நடத்திப் பல கோடி ரூபாய் பணத்தைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உண்மையை மறைத்து துரைக்கண்ணு ஆதரவாளர்கள் மீது கும்பகோணம் மற்றும் பாபநாசம் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து கும்பகோணத்தில் ரூ.800 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாகவும், இப்பணம் தேர்தலின் போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலைமையால் கொடுத்து வைக்கப்பட்டிருந்தாக எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதிலிருந்து மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக அதிமுக தலைமை அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கோடிக்கணக்கான ரூபாயை ரகசியமாகப் பதுக்கி வைத்திருப்பது தெரிகிறது. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இல்லை. நீதிமன்றத்தால் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்க முடியும்.கும்பகோணத்தில் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக ரூ.800 கோடி பதுக்கி வைத்திருந்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் வழியாகப் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்தும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், கும்பகோணம் ரூ.800 கோடி விவகாரம் குறித்தும், அது தொடர்பாகப் பதிவான 3 வழக்குகளின் பின்னணி குறித்தும் விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு , வாக்காளர்கள் பேரம் பேசி ஓட்டுக்குப் பணம் வாங்குகின்றனர். பொதுமக்களே ஊழல் வாதியாக மாறிவிட்டனர். ஒவ்வொரு தொகுதிகளிலும் அரசியல்வாதிகள் 50 முதல் 60 கோடி வரை சட்டவிரோதமாகத் தேர்தலுக்குப் பணம் செலவு செய்கின்றனர்.
வருமான வரித்துறைக்குத் தெரிந்தே தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது . அடிப்படை முறையே சரியில்லை, எனவே மாற்றம் ஒவ்வொருவரிடம் இருந்து தொடங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.