பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்க வட தமிழகத்தில் இருந்து படையெடுத்த பாமக தொண்டர்களை சென்னையின் புறநகர் பகுதிகளிலேயே தமிழக காவல் துறை தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்காத விரக்தியில் பாமக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர். வன்னியர் சமூகம் பெரும்பாலான சமூகமாக இருந்தாலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இன்னும் கிடைக்கவில்லை என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு ஆதங்கம் தெரிவிக்கிறார். மேலும் அவர் கூறுகையில், பாமக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறோம்.
இனி, இட ஒதுக்கீடு பெறாமல் விடப்போவதில்லை எனவும் கூறியுள்ளார். முதற்கட்ட போராட்டம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் நாள் போராட்டத்தின் இறுதியில் சாதிவாரி கணகெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளையும் செய்துள்ளார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. குணசேகரன் தலைமையில் சாதிவாரி கணகெடுப்பு நடத்த ஆணையத்தையும் அமைத்துள்ளார். இருந்தாலும் முதலமைச்சரின் இந்த அறிவிப்பு மரு.இராமதாஸ் அவர்களை பெரிதாக கவரவில்லை. எனவே பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து இரண்டாம் கட்ட போராட்டத்தை துவங்க உள்ளனர்.
பாமக தொண்டர்களுக்கு நிறுவனர் மருத்துவர் தெரிவித்துள்ள அறிக்கையில், பாமக தொடங்கப்பட்டதே ஊமை மக்களின் உரிமைக்காக தான், ஒரு போராளியாக நான் பல போராளிகளை கொண்டு இந்த அமைப்பை உருவாக்கியுள்ளேன். பாமக எப்போதுமே இட ஒதுக்கீடுகளுக்காக போராடும். வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 20 % இட ஒதுக்கீட்டை இலக்காக கொண்டு அனைவரும் களத்தில் போராட வேண்டும் என்று தொண்டர்கள் இடையே பேசியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள 16743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும், 12621 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் வரும் 14 ல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் இப்போராட்டம் அடுத்தடுத்து நகரம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என நீளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு பாமக சார்பில் நிர்வாகிகள் நியமிக்குப்பட்டு வருகின்றனர்.