புகாரை வாபஸ் பெற்றால் பணம் தருவதாக பிளாட் உரிமையாளர் கூறினார் என்றும், தன்னிடம் வெள்ளை பேப்பரில் அவரது உறவினர்கள் மிரட்டி கையெழுத்து வாங்கினர் என்றும் கொச்சியில் 6வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராஜகுமாரி (55). இவர் கொச்சியைச் சேர்ந்த இம்தியாஸ் முகம்மது என்பவரின் பிளாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது பிளாட் கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் உள்ளது. கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரின் மகனான இம்தியாஸ் முகம்மது கேரள உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் ராஜகுமாரி அடுக்குமாடி குடியிருப்பில் வாகனங்களை நிறுத்தும் பகுதியின் கூரையின் மேல் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்ததும் கொச்சி மத்திய போலீசார் விரைந்து சென்று ராஜகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகுமாரி 6வது மாடியில் இருந்து சேலையைச் சேர்த்துக் கட்டி கீழே இறங்கியது தெரிய வந்தது. அப்போது கை தவறி கீழே விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது. அவர் எதற்காக அவ்வாறு தப்பிக்க முயற்சித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் தொடக்கம் முதலே இந்த சம்பவத்தில் கொச்சி போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை. இம்தியாஸ் முகம்மதிடம் கூட போலீசார் கூடுதலாக விசாரணை நடத்தவில்லை. மேலும் ராஜகுமாரி மீது தற்கொலைக்கு முயற்சித்ததாக வழக்குப் பதிவு செய்யவும் போலீசார் தீர்மானித்தனர். இது அப்பகுதியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இம்தியாஸ் முகம்மதை காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி போலீசாரைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த சில அமைப்பினர் போராட்டமும் நடத்தினர். இதற்கிடையே கொச்சி சென்ற ராஜகுமாரியின் கணவர் சீனிவாசன், இம்தியாஸ் முகம்மதுக்கு எதிராகப் போலீசில் புகார் கொடுத்தார். தன்னுடைய மனைவியை வீட்டுக்குச் செல்ல விடாமல் இம்தியாஸ் சிறைபிடித்து வைத்திருந்ததால் தான் அவர் தப்பிக்க முயன்றதாகவும், அப்போது தான் அவர் கீழே விழுந்தார் என்றும் சீனிவாசன் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகே போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் எப்ஐஆரில் இம்தியாஸ் முகம்மதின் பெயரைக் கூட போலீசார் சேர்க்கவில்லை.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ராஜகுமாரி நேற்று மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். இதன் பிறகும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ராஜகுமாரியின் கணவர் சீனிவாசன் இன்று கொச்சியில் நிருபர்களிடம் கூறியது: இந்த வழக்கை இம்தியாஸ் முகம்மதும், போலீசாரும் சேர்ந்து திசை திருப்ப முயற்சிக்கின்றனர். புகாரை வாபஸ் பெற்றால் எனக்குப் பணம் தருவதாக இம்தியாசின் உறவினர்கள் கூறினர். எனக்குக் கண்பார்வை சற்று குறைவாகும். இதைப் பயன்படுத்தி இம்தியாசின் உறவினர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி சில வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கினர். என்னுடைய மனைவிக்கு நேற்று வரை கொரோனா நோய் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இன்று அவருக்கு கொரோனா இருப்பதால் உடனடியாக உடலைத் தர முடியாது என்று போலீசார் கூறுகின்றனர். இதில் சதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இம்தியாஸ் முகம்மது தன்னுடைய குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.