``இனிஷியல் திருடர்கள்! - எம்ஜிஆர் சர்ச்சை தொடர்பாக கமலை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்!

by Sasitharan, Dec 18, 2020, 11:29 AM IST

மதுரையில் சில தினங்களுக்கு முன் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், ``எம்ஜிஆரின் தொடர்ச்சி நான்தான். எம்ஜிஆரின் கனவே நிறைவேற்றுவேன்" எனக் கூறினார். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்புகள் வெளியாக, ``புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம். எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும்." என்று டுவிட்டரில் பதிவிட்டு மீண்டும் சீண்டினார்.

இது பெரிய சர்ச்சையாக மாற நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி, ``எம்ஜிஆர் வேடம் போட்டால்தான் மக்களை ஈர்க்க முடியும் என்று கமலே ஒப்புக்கொண்டுள்ளார். எம்ஜிஆர் எவ்வளவு நல்ல கருத்துகளைத் தனது படங்கள் மூலம் சொன்னார். ஆனால் கமல்ஹாசன் அப்படியா செய்தார்? அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்தாலே அந்த குடும்பம் காலி. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பமும் கெடும். அதைப் பார்க்கும் குழந்தைகளும் கெடுவார்கள்" என்றார்.

இப்படி தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிமுக நாளிதழான நமது அம்மா, இதுதொடர்பாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் நான் என்கிறார் கமல், எம்.ஜி.ஆரின் ஆட்சியைத் தருவேன் என்கிறார் ரஜினி. ஏற்கனவே பச்சை எம்.ஜி.ஆர், கிளிப்பச்சஒ எம்.ஜி.ஆர் என்று அரை டஜனுக்கும் மேலாக ஆட்கள் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். எம்ஜிஆர் தன் உதிரத்தில் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறு நடை போடுகிறது, தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்து நிற்கிறது.மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்குச் சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள், புரட்சித்தலைவர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுவார்கள் வேண்டுமானால் அதிமுகவில் வந்த அடிப்படை உறுப்பினர்களாக சேர்ந்துகொள்ளலாம்.

அதைவிட்டுவிட்டு புரட்சித் தலைவரின் பெயரைச் சொல்லி தங்களைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என நினைப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்திற்குப் புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடியாக்கி பிழைக்கலாம் எனக் கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டமாகும்.நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்க அலைகிற விஷப்பல்லிகளின் இத்தகைய யுக்தி கழகத் தொண்டர்களிடமும் பலிக்காது, அறிவார்ந்த அன்னைத்தமிழ் பூமியிலும் முளைக்காது. கலை உலகம் ஓய்வு கொடுத்து அதற்குப் பிறகு எஞ்சிய காலத்தை அரசியலில் கழிக்கலாம் என்று நினைப்பவர்கள் எல்லோருமே மனிதப் புனிதராம் மக்கள்திலகம் எம்ஜிஆரின் ஆட்சியைத் தருகிறோம் என்று சொல்கிறார்களே தவிர, ஒருவர் கூட கருணாநிதி ஆட்சி தருகிறோம் என்று பேச்சுக்குக் கூடச் சொல்லாமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கான கூச்சம் ஏன் வந்தது?

அதிலும் குறிப்பாகப் பெண் வேஷம் போட்டுக்கொண்டு கருணாநிதியிடம் சென்று பாராட்டு பெறும் அளவுக்கு கோபாலபுரத்து கூர்காவாக தன்னை காட்டிக்கொண்ட கமலஹாசனும் கட்சி ஆரம்பித்து கருணாநிதியின் ஆட்சியைத் தருவேன் என்று சொல்லாமல் அவ்வலை சண்முகம் சாலை தலைவனின் புகழ் உறிஞ்சி பிழைக்கலாம் என மேற்படி அவ்வை சண்முகி நினைப்பது வெட்கக் கேடு அல்லவா? எப்படியோ அடுத்த கட்சித்தலைவரின் புகழை தங்களுடையதாக்க நினைப்பதும் அண்டை வீட்டுக்காரரின் பெயரை அப்பாவுக்குப் பதிலாகப் போட்டுக்கொள்வதும் அனேகமாக ஒன்றுதானே" என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

You'r reading ``இனிஷியல் திருடர்கள்! - எம்ஜிஆர் சர்ச்சை தொடர்பாக கமலை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை