அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது சொந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சேலம் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அதிமுகவின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(டிச.19) சனிக்கிழமை காலையில் பெரிய சோர்கையில் உள்ள சென்றாயர் பெருமாள் கோயிலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார். அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.
அங்கு சாமி தரிசனத்தை முடித்த பின்பு, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து அவர் எடப்பாடியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதல்வரை வரவேற்க நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் தாம்பூலத் தட்டில் பூக்களுடன் காத்திருந்தனர். முதல் நாளிலேயே பல லட்சம் ரூபாய் செலவிட்டு, முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி தொடருமா என்று எல்லோரும் பேசினார்கள். ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி 4வது ஆண்டில் அரசு நடைபோட்டு வருகிறது. மின்சார உற்பத்தி, நீர் மேலாண்மையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
புயல், கொரோனா தொற்று போன்ற பேரிடர்களை அரசு வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளது. நெல் கொள்முதலில் தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளது.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. 43 ஆண்டுக் கால வரலாற்றில் ஒருமுறைகூட எடப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை இந்த எடப்பாடி தொகுதிக்கு உள்ளது. எடப்பாடி தொகுதியில் திமுக பிரசாரம் செய்வது பகல் கனவு காண்பதாகும்.நான் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் என்பதால் தான், அந்த மாணவர்களின் நிலையை உணர்ந்து மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சி நீடிக்குமா என்று பேசினார்கள். எனக்கு முதல்வர் பதவி இறைவன் கொடுத்தது. இவ்வாறு எடப்பாடி பேசினார்.
முதல்வர் பேசும் போது, எடப்பாடியில் இது வரை திமுக வென்றதில்லை என்று குறிப்பிட்டார். ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளரை விட 8 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.