வேறு எதையும் சொல்லித் தங்களது கட்சியை வளர்க்க முடியாதவர்கள், மதத்தைக் காட்டி கட்சியை வளர்க்கப் பார்க்கிறார்கள். மக்களுக்கு நிழல் எது, நிஜம் எது என்பது தெரியும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னை மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நேற்று(டிச.20), அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
பலருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:நான் ஏற்கனவே காணொலி காட்சி வாயிலாகத் தமிழகம் மீட்போம் என்கிற பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு எடுத்து வருகிறேன். மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கும் பிரச்சாரத்தை வரும் 23ம் தேதி தொடங்க இருக்கிறோம். அதை அறிவித்த உடனேயே அதனைச் செயல்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்என்ற தலைப்பில் அனைத்து சமயத் தலைவர்களும் பங்கெடுக்கும் மாபெரும் சமத்துவ நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள இனிகோ இருதயராஜைப் பாராட்டுகிறேன்.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி, பல்வேறு வகை உதவிகளை திமுக சார்பில் செய்து கொடுத்தோம். அந்த 'ஒன்றிணைவோம்' என்ற சொல்லை இனிகோ பயன்படுத்தி இருக்கிறார். நாம் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்த நாட்டுக்கு முதலில் தேவையானது, ஒன்றிணைதல்தான்! பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைதல்! ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒன்றிணைதல்! அடக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைதல்! அநியாயத்துக்கு எதிராகப் போராடுவதில் ஒன்றிணைதல்! எந்த ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வோடு ஒன்றிணைதல்! விவசாயிகளுக்காக ஒன்றிணைதல்! இந்த ஒன்றிணைதல் தான் இப்போதைய தேவை என்பதை இனிகோ உணர்த்துவதற்காக இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.
பல்வேறு மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அது இந்தியா. வேறு எதையும் சொல்லித் தங்களது கட்சியை வளர்க்க முடியாதவர்கள், மதத்தைக் காட்டி கட்சியை வளர்க்கப் பார்க்கிறார்கள். மக்களுக்கு நிழல் எது, நிஜம் எது என்பது தெரியும். அவர்கள் மதத்தைக் காப்பாற்ற வரவில்லை, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறார்கள்.மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு ஆதிக்கவாதிகள் கொடுக்கும் பட்டம்தான் கலகக்காரர்கள், தேசவிரோதிகள் என்பதாகும். அது அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை மாறவில்லை. ஆனாலும் இந்தப் போராட்டம் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி தான் இன்றைய விவசாயிகள் போராட்டம்!அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மக்களின் கோரிக்கையாக இருப்பது குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்சக் கூலி, குறைந்தபட்ச விலைதான். நாம் ஏன் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம் என்றால் அதனால் தான்!கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் முதல் தலைமுறையினர் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு 1972 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்கியவர் கலைஞர்.
1989ம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் கலைஞர். 1990ம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் கலைஞர். 1999ம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் கலைஞர். சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் கலைஞர். 2007ம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் கலைஞர். சிறுபான்மை சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தனி வாரியம் அமைத்தவர். இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, சத்துணவுத் திட்டம் ஆகியவற்றைக் கிறிஸ்துவ சமுதாய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நீட்டித்துத் தந்தார். 2010ம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர். இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்.
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஒரு தனி கட்டடத்தைக் கட்டி, அதன் திறப்பு விழாவில் கலைஞரை அழைத்த நேரத்தில், அந்தக் கட்டடத்திற்கு ஒரு பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக, அவர் அந்தக் கட்டடத்திற்கு 'அன்னை தெரசா' என்ற பெயரைச் சூட்டினார்.இப்போது, இந்த தமிழ்ச்சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை நாம் முறியடிப்போம் என்று உறுதியெடுக்கும் நிகழ்ச்சியாகத் தான் இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் மக்கள் மனதில் ஒற்றுமையை விதைக்கும் அரும்பணியை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.