திருவள்ளூர் அருகே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதிய சாலை இரண்டு மாதத்தில் சேதமடைந்ததால் ஒப்பந்ததாரருக்கு ஆட்சியர் 10 சவிகிதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தரமான சாலை அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே உள்ள செஞ்சி கிராமத்தில் ரூ.73 லட்சம் செலவில் கடந்த அக்டோபர் மாதம் சாலைகள் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட சாலைகள் இரண்டே மாதத்தில் ஆங்காங்கே பெயர்ந்து, சேதமடைந்தது. வாகன ஓட்டிகளும் செஞ்சி கிராமத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்ல மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா மீண்டும் அந்த சாாலையைச் சீரமைக்க உத்தரவிட்டார். அந்தப் பணிகளை செய்த ஒப்பந்ததாரர் எஸ்.பி.ராஜாராம் என்பவரை நேரில் அழைத்து விளக்கம் கேட்ட ஆட்சியர், சாலையை சீரமைக்க வழங்கப்பட்ட தொகையில் 10 சதவிகிதம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இனிவரும் காலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்றும், தரமற்ற சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களது உரிமங்கள் ரத்து செய்யப்படும் எனவும் ஆட்சியர் பொன்னையா எச்சரித்துள்ளார்.