சட்டசபை தேர்தல் வருது.. சென்னையில் குப்பைக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 24, 2020, 15:33 PM IST

மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி, சென்னையில் குப்பைக் கொட்டுவதற்குக் கட்டணம் வசூலிப்பதை மாநகராட்சி காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் குப்பைகளை முறையாக அள்ளுவதே இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இல்லாததால், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எம்.ஜி.ஆர். நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்படப் பல இடங்களில் பல நாட்கள் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்து காணப்படும்.

இந்த நிலையில், குப்பைகளைக் கொட்டுவதற்குக் கட்டணம் விதித்து சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. ஒழுங்காகவே குப்பை அள்ளுவதில்லை, இதற்குக் கட்டணம் வேறு... என்று மக்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த சூழலில் சட்டசபைத் தேர்தலும் நெருங்கி வருவதால், அதிமுக அரசு திடீரென குப்பைக் கட்டணத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தைப் பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனப் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சட்டசபை தேர்தல் வருது.. சென்னையில் குப்பைக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை