40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை. வந்தாலும் எதுவும் அவர்களுக்கு தேறாது என்பது தான் உண்மை என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
நேற்று ஞாயிறன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு வருமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த சுமார் 3000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட பேசிய நடிகர் சத்யராஜ், “தமிழர் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுங்கள்.. தைரியமுள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்” என்று செம காட்டமாக பேசினார்.
பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என நடிகர் சத்யராஜ் பேசுகிறார். ஐ.டி ரெய்டு வந்தால் தெரியும் அவர்கள் பயப்படுவது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் சத்யராஜ், “நான் ஒரு சாதாரண நடிகர், ஏதோ அப்பா வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 40 வருடங்களாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை வருமான வரித்துறை சோதனை வந்ததில்லை.
அப்படி வந்தாலும் எதுவும் அவர்களுக்கு தேறாது என்பது தான் உண்மை. நான் சம்பாதிக்கும் பணத்திற்கு சரியாக வரிக்கட்டி வருகிறேன் என்பதால் எதற்கும் பயப்பட போக போவாதில்லை, இதனால் என்னை கண்டு மாபெரும் அரசியல் தலைவர்கள் அஞ்ச வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.