மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பீகாரில் 3-வது முறையாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இப்போது பல கட்சிகள் குடும்பக் கட்சிகளாக உள்ளன.
பிரதமர் மோடி அரசு விவசாயிகளின் நலன்களுக்காக ஏராளமான பணிகளைச் செய்து வருகிறது. 9 கோடி விவசாயிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 18 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளோம்.விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று தாங்களே அதிக விலைக்கு விற்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் திடீரென கொண்டு வரப்படவில்லை. 20 ஆண்டுகள் கலந்தாலோசித்துப் பல தரப்பினரிடம் கருத்துக் கேட்பு நடத்திய பின்புதான் மத்திய அரசு இவற்றைக் கொண்டு வந்துள்ளது.
பஞ்சாப்பைத் தவிர வேறு எங்குமே வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகளின் தவறான புரிதல் காரணமாக போராட்டம் நடைபெறுகிறது. வேளாண் சட்டங்கள் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாரா என்று ராகுல்காந்திக்கும், திமுகவினருக்கும் நான் சவால் விடுக்கிறேன்.இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக அறிவிப்பீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பிரகாஷ் ஜவடேகர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.ஆனாலும், நிருபர்கள் விடவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார்? என்று கேட்டனர். அப்போதும் அவர், பாஜகவுக்கு சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன.
அதன்படி, அகில இந்தியக் கட்சித் தலைமைதான் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கும். அதைத்தான் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார் என்று பதிலளித்தார். இதற்கிடையே, பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஒரு இடத்தில் பேசும் போது,பாஜகவின் எச்.ராஜாவை எம்.எல்.ஏ.வாக்கி அமைச்சராக்குவோம் என்று கூறியிருக்கிறார். பாஜக தலைவர்களும் தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்தது பாஜக கூட்டணி ஆட்சிதான் வரும் என்று பேசி வருகின்றனர். ஆனால், அதிமுக இதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால், இந்த கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.