நமக்கு உணவிடும் விவசாயிகளுக்காக ஐபிஎல் டிக்கெட்டுகளை கிழித்தெறியுங்கள். பார்வையாளர் இன்றி விளையாட்டுப் போட்டியை நடத்திக்கொள்ளட்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், செல்வமணி, வி.சேகர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் காவிரி விவகாரம் தொடர்பாகக் கூட்டாகப் பேட்டியளித்தனர். தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் பாரதிராஜா கூறினார். இதன்மூலமாகத் தமிழ் நாட்டைப் பாதிக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்போம் என்றும் அறிவித்தார்.
இதன் பின் செய்தியாளர் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவைக்கு எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, அரசியல் சாயத்தைக் கலைத்துவிட்டுத் தமிழனாக ஒன்று கூடுங்கள்.
தமிழகம் கொந்தளிப்பில் இருக்கும்போது ஐபிஎல் வேண்டாம். இது இளைஞர்களை திசைமாற்றும் முயற்சி. ஐபிஎல் போட்டியைத் தள்ளி வைப்பதில் சட்ட சிக்கல் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். காவிரி போராட் டத்தைத் திசைத்திருப்பவே ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுகிறதா என்ற ஐயம் உள்ளது. துக்க வீட்டின் அருகே கொண்டாட்டங்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜல்லிக்கட்டு புரட்சியின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்த நம் தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைந்த போராட்ட எண்ணங்களைச் சிதறடிப்பதற்காகவே திட்டமிட்டு இந்த கிரிக்கெட் சூதாட்ட விளையாட்டுப் போட்டியை நடத்துகிறார்கள்.
நம் ஒற்றுமையை சிதறடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் திரளும் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து விடலாம் எனும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுகூடி விளையாட்டைத் தடுத்து நிறுத்தி வென்றெடுக்க வேண்டும். அதையும் மீறி போட்டி நடத்தப்படுமானால் பார்வையாளர்களாக அரங்கினுள் ஒருவர்கூடச் செல்லக் கூடாது.
கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டு வாங்கி விட்டோமே என நினைக்காமல் நமக்கு உணவிடும் விவசாயிகளுக்காக அதைக் கிழித்தெறியுங்கள். பார்வையாளர் இன்றி விளையாட்டுப் போட்டியை நடத்திக்கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.
இன்று செவ்வாயன்று (ஏப். 10) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - கொல்காத்தா இடையே ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நடைபெறும் கடும் கொந்தளிப்பை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாயிரத்துக்கு அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.