அதிமுகவை உடைத்து இரட்டை இலை சின்னத்தை முடக்க மிகப் பெரிய சதித் திட்டம் நடப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம், (டிச.26) விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதில், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது: “இப்போது யார், யாரோ எம்.ஜி.ஆர். என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் என்றால் அது ஒருவரே. எம்.ஜி.ஆரின் வாரிசு என்று யாரும் சொல்ல முடியாது. எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம்தான்.
இந்த தேர்தலில் நமக்கு எதிராக மிகப் பெரிய சதி திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா போராட்டம். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் நாம் சந்திக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். அம்மா சொன்னது போல் இந்த கட்சி நூறாண்டு காலம் இருக்க வேண்டுமென்றால், நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். யார் எம்.எல்.ஏ ஆகிறார்கள், யார் மந்திரி ஆகிறார்கள் என்பது பிரச்னை அல்ல. சில தலைவர்கள் போகலாம். சிலர் வரலாம்.
ஆனால், அதிமுகவை காப்பாற்றுவதற்கு தொண்டர்கள் இந்த தேர்தலில் வெற்றியை பெற்று தீர வேண்டும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அமைச்சர் ஆவேசமாக பேசியதில் இருந்து மத்திய பாஜக அரசு, அதிமுகவை உடைத்து இரட்டை இலையை முடக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பாஜகவுக்கு 60 தொகுதிகள் மற்றும் அமைச்சர் பதவிகள் கேட்டு பாஜக, அதிமுகவை நிர்ப்பந்தம் செய்வதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்நிலையில், சி.வி.சண்முகம் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.