சனிப்பெயர்ச்சியை ஒட்டி புதுச்சேரி திருநள்ளாறு, தேனி குச்சனூர் சனீஸ்வரன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெயர்வார். அதன்படி, இன்று (டிச.27) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. அதாவது சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் 20.12.2023- வரை வீற்றிருந்து பலன்களை வழங்க உள்ளார். கோச்சாரப்படி சனிபகவான் 3,6,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது நன்மை செய்யும் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை சனிப்பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் விருச்சிகம் ராசிக்கு 3வது வீட்டிலும், சிம்மம் ராசிக்கு ஆறாம் வீட்டிலும் மீனம் ராசிக்கு 11வது வீட்டிலும் சஞ்சரிக்கிறார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர் சிவன் கோயிலில் சனீஸ்வரனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்கூட்டியே பதிவு செய்த பக்தர்கள் 200 பேர் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வந்தால்தான் அனுமதி என்று சிறப்பு குழு அறிவித்ததை ஐகோர்ட் ரத்து செய்து விட்டது. அதனால், அனைத்து பக்தர்களும் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சிவபெருமான் மற்றும் சனீஸ்வரனுக்கு சிறப்பு ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன.
இன்னும் 48 நாட்களுக்கு சனிப்பெயர்ச்சி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், தமிழகத்தினி தேனி மாவட்டத்தில் சனீஸ்வரன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனீஸ்வர பகவான் சுயம்புவாக உருவாகி, தனி கோயில் கொண்டிருப்பது இந்த இடத்தில் மட்டும்தான். அதனால் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரன் கோயிலில், சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கும் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். இந்த கோயிலிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.