ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று(டிச.29) வெளியிட்ட அறிக்கையில் தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடைசியாக, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் டிச.3ம் தேதி ஒரு பதிவு போட்டார். ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். அதற்கு பிறகு அளித்த பேட்டியில், அண்ணாத்தே படத்தை முடித்து கொடுத்து விட்டு கட்சிக்கு வருவேன்.
கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன் என்று அறிவித்திருந்தார். அவர் அறிவித்ததுமே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், திமுக, அதிமுக கட்சிகளில் இருந்து பல முக்கிய புள்ளிகள் ரஜினி கட்சியில் சேருவார்கள். வரும் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். ரஜினி வருகையால், தமிழ்நாட்டு அரசியலே புரட்டிப் போடப்படும் என்றெல்லாம் கூறியிருந்தார்.
ஆனால், இன்று ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து விட்டார். இந்த சூழலில் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினி தனது உடல்நிலையால் எடுத்த முடிவை என்னிடம் தெரிவித்தார். அது தவிர்க்க முடியாதது. அதே சமயம் அவரது அறிக்கையைப் படித்து பார்த்தால், அவர் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக மக்களுக்கு பணியாற்ற உள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் ஏற்பட்டதைப் போல அவர் மீண்டும் ஒரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது எனது கணிப்பு என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில், குப்புற விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலே என்றொரு பழமொழி உண்டு.