வைகோ சர்க்கரை வியாதிக்காக நடைபயணம் போகிறார் என்றும் ஸ்டாலினுக்கு ஜாதகத்தில் அவர் முதலமைச்சர் ஆகின்ற வாய்ப்பே இல்லையென்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள எச்.ராஜா, "மத்திய அரசின் திட்டங்களின் காரணமாக மக்கள், மத்திய அரசின் பக்கம், பாஜகவின் பக்கம், பிரதமர் மோடியின் பக்கம் திரும்பிக் கொண்டிருப்பதால், தமிழகத்தில் உள்ள ஐந்து தீய சக்திகளும் ஒன்றாக சேர்ந்து, ஏதோ தமிழகத்தை பா.ஜ.க. வஞ்சிப்பது போன்று பொய்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், நாத்திகவாதிகள், இவாஞ்சலிஸ்ட் (மத போதகர்கள்), டெரரிஸ்ட் இந்த ஐந்து தீய சக்திகளும் சேர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்பட்டதுபோல, அதாவது இவர்கள் கடந்தகாலங்களில் செய்தவற்றை சொல்லி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள்.
வைகோ நடைபயணம் போகிறார். சுகர் கூடிப்போனா டாக்டர் ஒரு மணிநேரத்துக்கு பதிலாக இரண்டு மணிநேரம் நடக்கத்தான் செய்வார்கள். அதுக்காக இது ஒரு காரணமா? பக்கத்து வீட்டு குழந்தை, "தாத்தா, வைகோ தாத்தா ஏன் நியூட்ரின் சாக்லெட்டை எதிர்த்து நடைபயணம் போறார்?" என்று கேட்கிறது.
நியூட்ரினோ திட்டத்தை பற்றி வைகோவிற்கு தெரியுமா? விஞ்ஞானிகள் முடிவு செய்ய வேண்டியதை வெட்டிக் கூட்டம் வீதியிலே முடிவு செய்யக்கூடாது. யார் கொண்டு வந்தது நியூட்ரினோ திட்டத்தை? 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் டாடா இன்ஸ்டிடியூட் டி.என்.டி.எப் கிளியரன்ஸ்காக அப்ளை செய்திருந்தது.
2010 அக்டோபர் மாதம் டி.என்.டி.எப். அனுமதி கொடுக்கிறது. அப்போதானே ஆய்வு தொடங்கியது? ஸ்டாலினை வைத்துக்கொண்டு வைகோ இப்படி துவங்கலாமா? இவங்க ஆட்சிதான் க்ளியரன்ஸ் கொடுத்தது? மத்திய அரசு க்ளியரன்ஸ் கொடுக்கும் போது சுற்றுச்சூழல் அமைச்சர் யாரு? ஆ.ராசாதானே!
நானும் ஸ்டாலினுக்கு ஜாதகத்தை ஜோசியர்கிட்ட கொடுத்துப் பார்த்தேன், அவருக்கு முதலமைச்சர் ஆகின்ற வாய்ப்பே இல்லையென்று சொல்லி விட்டார். அதுனாலதான் 'பொன்னார்'னு சொல்லுறதுக்கு 'பொன்னர் சங்கர்'னு சொல்றாரு 'எடப்பாடி'க்கு 'வாழப்பாடி'னு சொல்லறாரு, 'பூனை மேல் மதில் போல'னு சொல்றாரு. பூனை மேல மதில வச்சா பூனை இறந்துடாதா? 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே'னு சொல்கிறார்.
என்ன பேசறதுனே தெரியாம மனச்சிதைவுல இருக்காங்க. ஸ்டாலின் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், கதிராமங்கலம் போன்ற தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை மோடி அரசு கொண்டுவந்தது என்று சொல்றாரு. பொய் பேசுவதற்கு வெக்கப்பட வேண்டாமா? ஏற்கனவே சொன்னேன், நியூட்ரினோ திமுக கொண்டுவந்தது. இப்போ அவரே சுனாமி வந்துவிடும் என்று சொல்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.