அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 38 தொகுதிகளா? உலா வரும் உத்தேச பட்டியல்..

by எஸ். எம். கணபதி, Jan 4, 2021, 13:13 PM IST

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறி, ஒரு உத்தேச பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் தேனியில் மட்டும் அதிமுகவின் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் இந்த கூட்டணி தோல்வியுற்றது.வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

பாஜகவும் இதை ஒப்புக் கொண்டாலும், முதல்வர் வேட்பாளராக அதிமுகவால் அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை கூட்டணி முதல்வர் வேட்பாளராக இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போல், பாமக, தேமுதிக கட்சிகளும் கூட்டணியை இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை. இதனால், கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக 38 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும் இந்த தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுகவுக்கு அக்கட்சி அனுப்பி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவின் உத்தேசப் பட்டியல் என்று ஒரு பட்டியலும் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியல் வருமாறு: சென்னை தி.நகர்-ஹெச்.ராஜா, கொளத்தூர்- ஏஎன்எஸ் பிரசாத், மயிலாப்பூர்-கரு.நாகராஜன், துறைமுகம்-வினோஜ்செல்வம், வேளச்சேரி-டால்பின் தரணி, மாதவரம்-சென்னை சிவா, திருவள்ளூர்-லோகநாதன், செங்கல்பட்டு-கே.டி.ராகவன், கே.வி.குப்பம்-கார்த்தியாயினி, பென்னாகரம்-வித்யாராணி, திருவண்ணாமலை-தணிகைவேல், போளூர்- சி.ஏழுமலை, ஓசூர்-நரசிம்மன், சேலம்மேற்கு-சுரேஷ்பாபு, மொடக்குறிச்சி-சிவசுப்பிரமணியன், ராசிபுரம்-வி.பி.துரைசாமி, திருப்பூர்வடக்கு-மலர்க்கொடி, கோவைதெற்கு-வானதி சீனிவாசன், சூளுர்-ஜி.கே.நாகராஜ், திருச்சிகிழக்கு-டாக்டர் சிவசுப்பிரமணியம், பழனி-என்.கனகராஜ், அரவக்குறிச்சி-அண்ணாமலை, ஜெயங்கொண்டம்-அய்யப்பன், திட்டக்குடி-தடாபெரியசாமி, பூம்புகார்-அகோரம், மயிலம்-கலிவரதன், புவனகிரி-இளஞ்செழியன், திருவையாறு-பூண்டிவெங்கடேசன், தஞ்சாவூர்-கருப்புமுருகானந்தம், கந்தர்வக்கோட்டை-புரட்சிகவிதாசன், சிவகங்கை-சத்தியநாதன், பரமக்குடி-பொன்.பாலகணபதி, மதுரைகிழக்கு-ராம சீனிவாசன், நெல்லை-நயினார்நாகேந்திரன், சாத்தூர்- மோகன்ராஜுலு, தூத்துக்குடி-சசிகலாபுஷ்பா, நாகர்கோயில்- காந்தி. இவ்வாறு பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

இது பற்றி பாஜக பிரமுகர்களிடம் கேட்ட போது, அந்த பட்டியல் அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்றனர். அதே சமயம், அதில் உள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பலரும் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு குறைந்தது 40 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

You'r reading அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 38 தொகுதிகளா? உலா வரும் உத்தேச பட்டியல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை