விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து பல போராங்களை சந்தித்த பின் தமிழக காவலர்களை போய் நல்லவர்கள் என நம்பும் படி நடித்து தவறு செய்துவிட்டேன் என பேசியது போல் ரஜினி போராட்டங்களை சந்தித்த பின் டிவிட் போடட்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பதை கண்டித்தும், ஐபிஎல் போட்டி போராட்டம் திசை திருப்பக்கூடும் என கருதியும் சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக்காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். போராட்டத்தின் போது காவலர்கள் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், “வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஆமிர், “விஜயகாந்த் பல படங்களில் நல்ல போலீசாக நடித்தார்... பின் அரசியல் கட்சி ஆரம்பித்து பல போராங்களை சந்தித்த பின் பொதுகூட்டங்களில் பேசும் போது இந்த தமிழக காவலர்களை போய் நல்லவர்கள் என மக்கள் நம்பும் படி நடித்து தவறு செய்துவிட்டேன் என பேசினார்.. அதேபோல் ரஜினி அரசியலில் வந்து போராட்டங்களை சந்தித்த பின் காவல்துறையினருக்கு ஆதரவாக டிவிட் போடட்டும்.
என்றைக்காவது பாமர மக்களுக்கு பாதிப்பு வந்தபோது அவரது ட்விட்டர் பேசுகிறதா? பணமதிப்பு நீக்கம் எனும் போது கொப்பளிக்கிறது. ஹாட்ஸ் அப் என்று சொல்கிறது.
காவல் சீருடை அணிந்தவர்களை தாக்குபவர்கள் மீது கடும் சட்டம் கொண்டு வரணும் என்று சொல்கிறார். இவர் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்துக்கு வந்து போராட்டத்தில் காவலர்கள் யார் என்று சந்திக்கும் போதுதான் காவல்துறை பற்றி தெரியவரும்.
ஒரு மாதத்துக்கு முன் உஷா என்ற கர்ப்பிணி பெண் காவல் அதிகாரி சீருடையில் எட்டி உதைத்து கொல்லப்பட்டபோது அந்த கேள்விக்கு பதிலே சொல்லாமல் கும்பிட்டு விட்டு போனீர்களே அது வன்முறையாக உங்களுக்கு தெரியவில்லையா?
அதற்கு பின்னால் நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்வி கேட்டபோது நீங்கள் பதிலே சொல்லவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் இறுதி வடிவம் பெறும்போது வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆட்டோ, குடிசை எரிக்கப்பட்டது. அது வன்முறையாக தெரியவில்லையா? கேட்டால் தேன் கூட்டை கலைத்ததாக போலீஸார் சொல்கிறார்கள்.
போலீஸுக்கு தேன் கூட்டை கலைப்பதுதான் வேலையா? அப்போதெல்லாம் நீங்கள் பேசவில்லை. அப்பாவி மக்கள் அலங்காநல்லூரிலிருந்து போராடியது தெரியாதா? அன்று மாணவர்களை காப்பாற்ற குறுக்கே விழுந்து மண்டை உடைந்த தாய்மார்கள் பற்றி தெரியுமா? அதுக்கு ஏன் உங்கள் ட்விட்டர் பேசவில்லை.
சீருடை பணியாளரை தாக்கினால் கடுமையான சட்டம் இயற்றுனும் என்றால் இதை யார் சொல்வது. மத்திய பாசிசத்தின் குரல் அவர்கள் சொல்வதை இவர் நிறைவேற்றுகிறார்” என்று காட்டமாக தெரிவித்தார்.