நெஞ்சம் முழுக்க அழுக்கும் துர்சிந்தனையும்.. உதயநிதி மீது டிடிவி கடும் தாக்கு..

by எஸ். எம். கணபதி, Jan 7, 2021, 15:39 PM IST

சசிகலா, எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது டி.டி.வி.தினகரன் கடுமையாகத் தாக்கியுள்ளார். நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும் என்று அவர் கூறியுள்ளார்.திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மகளிரணி செயலாளர் கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஊர்,ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்லக்குடியில் உதயநிதி பேசிய பேச்சு தற்போது சமூக ஊடகங்ககளில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசும் போது, எடப்பாடி இல்ல, அவர் டெட்பாடி; சசிகலா கால்ல அப்படித்தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்தார்.. என்று தொடர்ந்து சில வார்த்தைகளை அவர் கூறியுள்ளார். இதுதான் பல்வேறு தரப்பினரையும் முகம் சுழிக்க வைத்திருக்கிறது.உதயநிதியின் பேச்சுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி பெண்களைப் பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியிருக்கிறார்.

உதயநிதிக்கு திமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், அவர் மற்ற கட்சிகளின் மூத்த தலைவர்களைக் கூட அவமரியாதையாகவும், அலட்சியமாகவும் கமென்ட் அடிப்பதை மக்கள் ரசிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே அவர் இரண்டு, மூன்று சர்ச்சைகளில் சிக்கிவிட்டார். இதையடுத்து, உதயநிதியால் திமுக விழ வேண்டிய ஓட்டுகள் கூட விழாமல் போய் விடும் என்று திமுக புள்ளிகளே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை