தமிழரின் பண்பாட்டு நிகழ்வான மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் தொடங்கியுள்ளது. கோவிட்-19 காரணமாக சில விதிமுறைகளோடு தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெறுகின்றன. கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர். ஒவ்வொரு நிகழ்விலும் 150க்கும் மேற்பட்டோர் போட்டியிட முடியாது.
அதேபோன்று போட்டியில் பங்கேற்பவர்கள் கோவிட்-19 பாதிப்பு இல்லை என்ற சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்க்க இருக்கிறார். இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு ஆகியவற்றின் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்தது. ஆனால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தின் முக்கியமான பங்கு என்று வலியுறுத்தியது. சென்னையில் நடைபெற்ற பெரிய போராட்டத்திற்குப் பிறகு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்கப்பட்டது.