சாதிக் கலவரம் குறித்த ட்விட்டர் பதிவால் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஆராயி மற்றும் அவரது மகள் தாக்கப்பட்டு, மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் சாதிய மோதலுடன் முதலில் தொடர்புபடுத்தப்பட்டது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் அது சமூக விரோதிகள் நடத்திய தாக்குதல் என்றும் தெரிய வந்தது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாவிகளா கொன்னு புடிங்கினா மண்ணைத் தின்னவா முடியும், இந்த சம்பவங்களை பார்க்கும் போது பெண்ணாய் பதறுகிறேன், தாயாய் கதறுகிறேன், மண்ணுக்காக மனிதத்தை இழந்த சாதி வெறி நாய்களா'' என்று கடும் வார்த்தைகளால் பதிவிட்டிருந்தார். மற்றொரு பதிவில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சாடி கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
கஸ்தூரியின் இந்த கருத்து சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கிறது என்று நடிகை கஸ்தூரி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக நீதி சட்டப்பேரவை இயக்கம் சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தவறாக பதிவிட்டதாக வருத்தம் தெரிவித்து இருந்தார். அதில், “பிழைக்கு வருந்துகிறேன். மன்னித்து விடுங்கள்.. வேலாம்புதூர் படுகொலை குறித்து முந்தைய கீச்சில் Anniyar என்பதற்கு பதில் Vanniyar என்று எழுத்துப்பிழை காரணத்தால் அந்த கீச்சை நீக்குகிறேன்” என்று தெரிவித்தார்.
நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டதாகவும், இரண்டு சமூகத்திற்கு இடையே பகையுணர்வு ஏற்படுத்தும் விதத்தில் அவர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த பாமக வழக்கறிஞர் ஜானகிராமன் என்பவர் கடந்த மாதம் 10ம் தேதி காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தார்.
காவல்துறையினர் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் வழக்கறிஞர் ஜானகிராமன், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கடந்த மாதம் 14ம் தேதி ராணிப்பேட்டை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுப்பிரியாவிடம் புகார் அளித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி அனுப்பிரியா, மனுதாரர் கொடுத்த புகாரில் முகாந்திரம் இருப்பதால், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.