பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகப் பாடகர் கோவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் சில நாள்களுக்கு முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் ரத யாத்திரை நடைபெற்றது. அந்த சமயம் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல நிலைகளிலும் கண்டனங்கள் எழுந்தன. ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
அப்போது பிரதமர் மோடிக்கு எதிராகவும் ரத யாத்திரைக்கு எதிராகவும் நாட்டுபுறப்பாடகர் கோவன் பாடல் ஒன்றை பாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவி பல நிலைகளில் ஆதரவையும் சில நிலைகளில் எதிர்ப்பையும் பெற்றது.
கோவனின் பாடல் தேசியத்துக்கு எதிரானது என திருச்சியைச் சேர்ந்த பா.ஜ.க தொண்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதன் அடிப்படையில் பாடகர் கோவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் மது விற்பனையும் குறித்து பாடல் பாடியதால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.