தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் புதிய பிரச்சாரப் பயணத்தை ஜன.29 முதல் தொடங்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் இன்று(ஜன.25) நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்ட போது, பலரும் தங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வரவில்லை, பட்டா கிடைக்கவில்லை, குடிநீர் இணைப்பு இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை தெரிவித்தனர். அதனால், நான் இன்று கருணாநிதியின் இல்லத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். அதற்காக ஒரு திட்டம் வகுத்துள்ளேன்.
வரும் 29ம் தேதி முதல் நான் மாவட்டந்தோறும் செல்லவிருக்கிறேன். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் இந்தப் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் ஒரு விண்ணப்பப் படிவம் தரப்படும். அதில் அவர்கள், பட்டா பிரச்னை, ஓய்வூதியப் பிரச்னை போன்ற பிரச்னைகளை குறிப்பிட்டு கொடுக்க வேண்டும். நான் அந்த தொகுதிக்கு வரும் போது அவை என் முன்பாக ஒரு பெட்டியில் போடப்பட்டு சீலிடப்படும். முன்னதாக, அந்த படிவத்தில் இருந்து ரசீது கிழித்து தரப்படும். இப்படி தமிழகம் முழுவதும் வாங்கியிருக்கும் மனுக்களை நிறைவேற்றுவதற்காக திமுக ஆட்சிக்கு வந்ததும் தனி துறை அமைக்கப்பட்டு, அந்த மனுக்கள் துறை வாரியாக, மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வு காணப்படும்.
கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் http://www.stalinani.com/ என்ற இணையதளத்திலும், 9171091710 என்ற தொலைபேசியிலும் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாத சாதாரண பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காவே இந்த திட்டம். ஒரு கோடி குடும்பங்களுக்காவது இந்த திட்டத்தில் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று கலைஞர் சொல்லுவார். அதே போல் செய்து காட்டுவார். அவர் வழியில் அவர் வசித்த இந்த இல்லத்தில் இருந்து நானும் உறுதி அளிக்கிறேன். அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக, தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக இந்த உறுதிமொழியை அளிக்கிறேன். பாலங்கள் கட்டுவது, குடிநீர் திட்டம் போடுவது போன்ற பெரிய பிரச்னைகளைப் பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லுவோம்.
அதற்கு டி.ஆர்.பாலு தலைமையில் குழு போட்டு அவர் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இப்போது நான் சொல்லுவது மக்களின் தனிப்பட்ட பிரச்னைகள். குடும்பப் பாகப்பிரிவினை போன்ற தனிப்பட்ட பிரச்னைகளை நாம் தீர்க்க முடியாது. அதுவல்ல. சாதிச் சான்றிதழ் பெற முடியாதது, பட்டா, ஓய்வூதியம் கிடைக்காதது, நூறு நாள் வேலை கிடைக்காதது போன்ற பிரச்னைகளைத்தான் மக்கள் குறிப்பிட வேண்டும். நிச்சயமாக, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் தீர்வு காணப்படும். ஜன.29ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். 30 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் பயணம் செய்து முடித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.