அதிமுகவில் இருந்து சசிகலாவை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வரும் நிலையில், சசிகலாவை வாழ்த்தி ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது, அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, கடந்த 27ம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார் என்று சிறை நிர்வாகம் முறைப்படி அறிவித்தது. தற்போது சசிகலா உடல்நிலை தேறியதும் சென்னை திரும்ப உள்ளார். இதற்கிடையே, சசிகலா விடுதலையாவதால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
மேலும், தன்னை முதல்வர் ஆக்கியது சசிகலா அல்ல என்றும், அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள்தான் தன்னை முதல்வராக தேர்வு செய்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இது சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சசிகலாவால்தான் அவர் முதல்வர் ஆக்கப்பட்டார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். அப்படியிருக்கும் போது முதல்வர் இப்படி பேசுவது பதவி கொடுத்தவருக்கு துரோகம் இழைப்பதாகும் என்று பலரும் பேசி வருகிறார்கள். அதே சமயம், ஆரம்பத்தில் சசிகலாவை கடுமையாக எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சசிகலா விடுதலை குறித்து எந்த கருத்துமே கூறாமல் அமைதி காத்து வருகிறார். மேலும், அதிமுகவில் அண்ணன்,தம்பி சண்டைகளை ஒதுக்கி வைத்து விட்டு, வெற்றி ஒன்றே லட்சியமாக செயல்பட வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். அவர் இப்படி சொல்வது டி.டி.வி.தினகரைத்தான் என்று அதிமுகவில் பேசி வருகிறார்கள். இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வத்தின் 2வது மகன் ஜெயபிரதீப் திடீரென சசிகலாவை வாழ்த்தும் வகையில் முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது: பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதிப்புக்குரிய அம்மையார் திருமதி சசிகலா நடராஜன் அவர்கள், பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று, அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி, மனநிம்மதியாக மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு. இவ்வாறு ஜெயபிரதீப் கூறியுள்ளார். சசிகலாவை வாழ்த்தும் வகையில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பேசிய போது அவர்களுக்கு கட்சித் தலைமை எச்சரிக்கை விடுத்தது. அதே போல், சசிகலாவை வரவேற்று திருநெல்வேலியில் போஸ்டர்கள் ஒட்டிய எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்படியிருந்தும் ஓ.பி.எஸ் மகன் இப்படி பதிவிட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதிமுகவில் இது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.