சட்டசபையில் கவர்னர் உரையாற்றத் தொடங்கியதும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபை இன்று(பிப்.2) காலை 11 மணிக்குக கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் புரோகித் உரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து அவர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து எதிர்ப்பு குரல் எழுப்பினர். மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் திட்டங்களை ஒதுக்கிய நிலையில் இப்படிச் செயல்படுவது தவறு என்று அவர்களிடம் கவர்னர் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம், சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரில் அமைதியாக விவாதம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் பல்வேறு பிரச்சனைகளை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாகக் கூறி, கவர்னர் உரையைப் புறக்கணித்து விட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.